விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து, பலத்த இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த திடீர் மழையின் காரணமாக, நேற்று மாலை சுமார் 6:30 மணியளவில் மங்கலம்பேட்டை நகர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்கள் முழுவதும் மின் விநியோகம் முற்றிலும் தடைபட்டது.
மழை நின்ற பிறகும், பல மணி நேரமாகியும் மின்சாரம் வராததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “மின் விநியோகப் பாதையில் பழுது ஏற்பட்டுள்ளது, அதனைச் சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன” என அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் விளக்கத்தை ஏற்று பொதுமக்கள் காத்திருந்தனர். ஆனால், இரவு 12:30 மணியைக் கடந்தும் மின்சாரம் வழங்கப்படவில்லை. கோடைகால வெப்பத்தின் தாக்கம் மற்றும் நள்ளிரவில் கொசுக்கடியால் குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் தூங்க முடியாமல் தவித்தனர். மின்வாரியத்தின் இந்த மெத்தனப் போக்கைக் கண்டித்து, ஆத்திரமடைந்த 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றிணைந்து நள்ளிரவில் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த திடீர் போராட்டத்தால் அந்த வழியே சென்ற வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் அதிகாரிகள் நள்ளிரவில் பேச்சுவார்த்தை நடத்தினர். பழுதுகள் விரைவாக சரி செய்யப்பட்டு மின் விநியோகம் சீரமைக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
அதிகாரிகளின் தொடர் முயற்சியால், நள்ளிரவு சுமார் 1:00 மணியளவில் மங்கலம்பேட்டை பகுதியில் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டது. மாலை 6:30 மணிக்குத் தடைபட்ட மின்சாரம், சுமார் ஆறரை மணி நேரத்திற்குப் பிறகு நள்ளிரவு 1 மணிக்கு வந்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
