தமிழகத்தில் கோடையின் தாக்கம் அதிகரித்துள்ளதால் ஏசியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் தென் இந்திய மாநிலங்களில் 2025 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2026 மார்ச் மாதத்தில் மின் பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளது என்பது மத்திய மின்துறை தெரிவித்துள்ளது.
தகவல்களின் படி, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டலத்தின் மொத்த தினசரி மின் தேவை 69,934 மெகாவாட்டிலிருந்து 73,805 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.
இந்த மாநிலங்களில், தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 19,679 மெகாவாட்டாக இருந்த மின் தேவை, இந்த ஆண்டு 19,822 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. குறிப்பாக ஏப்ரல் 21 ஆம் தேதி, தமிழகத்தின் மின் தேவை 21,060 மெகாவாட்டை எட்டி புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, மே மாதம் முதல் மாலை நேரங்களில் மின் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக மத்திய மின்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை சமாளிக்க தமிழக மின் வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


