சென்னை : தமிழக சட்டசபைத் தேர்தல் 23.04.2026 அன்று நடைபெற்றது. தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடிக்குள் புகைப்படம் அல்லது வீடியோ பதிவு செய்தால், 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என தேர்தல் ஆணையம் முன்கூட்டியே எச்சரித்திருந்தது.
இந்நிலையில், வாக்குச்சாவடிக்குள் மொபைல் போன் கொண்டு சென்று, வாக்களித்ததை புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக ஒரு சம்பவம் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலின்படி, அம்பத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் டாக்டர் பூர்ணிமாவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்ததை, சி.வி. ஆறுமுகம் என்ற நபர் படம் பிடித்து வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்த பதிவு பரவலாகப் பகிரப்பட்டதையடுத்து, பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட வழிகாட்டுதல்களில் : வாக்குச்சாவடிக்குள் மொபைல், கேமரா உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்வது தடை, வாக்களிக்கும் செயலை படம் எடுப்பது அல்லது வீடியோ பதிவு செய்வது சட்டவிரோதம் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறுவோருக்கு, இந்தியத் தேர்தல் சட்டங்களின்படி 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாக்காளர் மொபைல் கொண்டு உள்ளே சென்றதை ஏன் தடுக்கவில்லை?, பாதுகாப்பு சரிபார்ப்பு முறைகள் பின்பற்றப்பட்டதா?, வாக்குச்சாவடிக்குள் கண்காணிப்பு போதுமானதாக இருந்ததா? என வாக்குச்சாவடி பணியில் இருந்த அதிகாரிகள் மீது கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


