அதிமுகவில் உள்கட்சி மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து அதிமுக தலைமையிடம் ராஜினாமா கடிதங்களை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக அதிமுகவை சேர்ந்த பலர் அக்கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். இது அதிமுக தலைமைக்கு பெரும் தலைவலியை உருவாக்கி உள்ளது.
இந்த சூழலில், சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் 11 நிர்வாகிகள் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர். மாவட்ட இணைச் செயலாளர், மாவட்ட பொருளாளர், இளைஞர் பாசறை நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள் இந்த நடவடிக்கையால் பதவியை இழந்தனர். இதையடுத்து கட்சிக்குள் அதிருப்தி மேலும் அதிகரித்ததாக கூறப்படுகிறது.
500-க்கும் மேற்பட்டோர் விலக முடிவு
பதவிநீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பேருந்துகள் மற்றும் கார்கள் மூலம் சென்னை நோக்கி புறப்பட்டுள்ளனர். அவர்கள் அதிமுக தலைமையகத்தில் ராஜினாமா கடிதங்களை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
த.வெ.க.வில் இணையலாம் என்ற தகவல்
அதிமுகவில் இருந்து விலகும் நிர்வாகிகளில் சிலர் அடுத்த சில நாட்களில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது. ஆனால், இதுகுறித்து சம்பந்தப்பட்ட தரப்புகள் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
