ஆவடியில் 20-க்கும் மேற்பட்ட பியூஸ் கேரியர்கள் திருட்டு – 2 பேர் கைது

சென்னை ஆவடி பகுதியில் மின்சார டிரான்ஸ்பார்மர்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பியூஸ் கேரியர்கள் திருடப்பட்ட சம்பவத்தில், 2 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆவடி தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில், நேற்று காலை திடீரென மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

பொதுமக்களின் புகாரின் பேரில் மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பியூஸ் கேரியர்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மின்சாரத்துறை அதிகாரிகள் ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அம்பத்தூர் அருகே சூரப்பட்டு பிருந்தாவன் நகரைச் சேர்ந்த தினேஷ்குமார் (19) மற்றும் மாதனாங்குப்பம் அந்தோணி நகரைச் சேர்ந்த வினித்ராஜ் (20) ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Post

Latest News