நோயாளி இறந்ததால் ஆவேசம் : மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்

மகாராஷ்டிரா மாநிலம், உல்ஹாஸ்நகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் ஆவேசமடைந்து மருத்துவமனையில் பொருட்களை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

45 வயதான பகவான் நிம்போரே என்பவர் கல்லீரல் தொடர்பான பிரச்சனை காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை அறிந்த அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியும் கோபமும் அடைந்தனர். இதையடுத்து மருத்துவமனை வார்டுக்குள் சென்று மருத்துவ உபகரணங்களை உடைத்துள்ளனர். மேலும் மருத்துவ பணியாளர்களுடனும் வாக்குவாதம் செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, மருத்துவமனை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்களும் பணியாளர்களும் தாக்கப்பட்ட சம்பவத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Latest News