வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில்வே நிலையத்தில் திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை போலீசார் மீட்டு, திருட்டில் தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ளனர்.
காட்பாடி கரசமங்கலம் பெருமாள்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஏழுமலையின் மகன் திருநாவுக்கரசு, கடந்த ஜூலை 1-ஆம் தேதி சென்னை செல்லும் நோக்கில் தனது இருசக்கர வாகனத்தை காட்பாடி ரயில்வே நிலையத்தில் நிறுத்திவிட்டு சென்றிருந்தார். மறுநாள் திரும்பி வந்தபோது வாகனம் காணாமல் போனதால், காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் தயாளன் உத்தரவின்பேரில், காவல் உதவி ஆய்வாளர் ஏ. குமார் தலைமையிலான தனிப்படை விசாரணை மேற்கொண்டது.
நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில், காட்பாடி வள்ளிமலை கூட்ரோடு பகுதியில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்தபோது, அது காட்பாடி ரயில்வே நிலையத்தில் திருடப்பட்ட வாகனம் என்பது உறுதியானது.
இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் குடியாத்தம் குச்சனூர் அழகர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த வரதராஜின் மகன் முனியப்பன் (45) என்பது தெரியவந்தது. மேலும், சுமார் 10 நாட்களுக்கு முன்பு காட்பாடி ரயில்வே நிலையத்தில் இருந்து அந்த இருசக்கர வாகனத்தை திருடியதையும் அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, முனியப்பன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், திருடப்பட்ட இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
