மகாராஷ்டிர மாநிலத்தில் 21 ஆண்டுகளுக்கு முன்பு தனது நண்பனைத் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, உத்தரப் பிரதேசத்தில் போலி அடையாளத்துடன் தலைமறைவாக வாழ்ந்து வந்த 41 வயது நபர் ஒருவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
இந்தக் கொலை வழக்கு கடந்த 2005-ம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி பதிவானது. மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டம், பதிபந்தர் கிராமத்தில் உள்ள ஒரு ஓடைக்கு அருகே திலீப் துக்காராம் சவான் (30) என்ற வாலிபர் தலை நசுங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அப்போது கொலையாளி குறித்து எந்தவொரு துப்பும் கிடைக்காததால் வழக்கு பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.
சமீபத்தில், காவல் ஆணையரகம், பல ஆண்டுகளாகக் கிடப்பில் இருக்கும் கொலை வழக்குகளை மறுவிசாரணை செய்ய உத்தரவிட்டது. இதன் பேரில் குற்றப்பிரிவு போலீசார் 2005-ம் ஆண்டின் வழக்கு ஆவணங்களை மீண்டும் கையில் எடுத்து, அப்போதைய சாட்சிகளிடம் மறுவிசாரணை நடத்தினர்.
அப்போது, முக்கிய குற்றவாளியான ராஜேஷ் சுரேஷ் சோன்கர் (41) உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. மேலும் இவர், கடந்த 15 ஆண்டுகளாக உ.பி.யில் போலி அடையாளத்துடன் இ-ரிக்ஷா (E-Rickshaw) ஓட்டுநராக வாழ்ந்து வந்துள்ளார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வைத்து அவரைக் கைது செய்தனர். போலீசாரின் பிடியில் சிக்கிய ராஜேஷ் சோன்கர், தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.
