அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான வைகை செல்வன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார்.
ராஜினாமா கடிதத்தில், திமுகவுடன் சமரசப் போக்கை கடைப்பிடிக்க முயன்றதால், அதிமுக தனது எதிர்க்கட்சி அடையாளத்தை இழந்துவிட்டதாகவும் வைகை செல்வன் விமர்சித்துள்ளார்.
தேர்தல் காலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சூழ்நிலையிலும் கட்சிக்காக தொடர்ந்து பிரசாரம் செய்ததாக வைகை செல்வன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். அதன்பிறகும் தனக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும், “மரணத்தை விடக் கொடியது புறக்கணிப்பு” என்பதை நேரடியாக உணர்ந்ததாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து சில முக்கிய நிர்வாகிகள் விலகி, பிற அரசியல் கட்சிகளில் இணையும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
