“வேண்டுமென்றே மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது” – அதிர்ச்சி தகவல் வெளியிட்ட அமைச்சர் நிர்மல்குமார்!

சென்னையில் பல பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் மக்கள் அவதி அடைந்துள்ளனர். அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், தமிழ்நாட்டின் மின்சார கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “மின்சாரத்துறையில் தற்போது கட்டமைப்பு வசதிகள் போதுமான அளவில் இல்லை. மேலும், சோலார் மின் உற்பத்தியில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட பின்தங்கியுள்ளது. இதை சரிசெய்யும் வகையில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் புதிய சோலார் மின் கொள்கை அறிவிக்கப்படும்” என்றார்.

மின்வெட்டு தொடர்பாக பொதுமக்களுக்கு வெளிப்படையான தகவல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், எந்த காரணத்தால் மின்வெட்டு ஏற்பட்டது, அதை சரிசெய்ய எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது என்பதையும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

மேலும், “சிலர் திட்டமிட்டு பியூஸ் கேரியர்களை அகற்றி மின்விநியோகத்தை பாதிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வேண்டுமென்றே மின்வெட்டு ஏற்படுத்தப்படும் சம்பவங்கள் நடக்கின்றன. இதுபோன்ற செயல்களை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது” என்று தெரிவித்தார்.

பியூஸ் கேரியர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட சிலரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வடசென்னை பகுதிகளில் மின்வெட்டு புகார்களை உடனடியாக சரிசெய்ய கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பெரம்பூரில் ஏற்பட்ட மின்தடை 40 நிமிடங்களுக்குள் சரிசெய்யப்பட்ட போதிலும் சிலரின் தூண்டுதலால் போராட்டங்கள் நடைபெற்றதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Post

Latest News