சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே சரக்கு லாரியில் ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்து பழைய மின்கலன்கள் மற்றும் கணினி உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு மகாராஷ்டிர மாநிலம் புனே நோக்கி சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
இந்த லாரி பள்ளிகொண்டா பகுதியில் சென்றபோது, லாரியில் இருந்து திடீரென புகை வெளியேறியதாக கூறப்படுகிறது. சில நிமிடங்களிலேயே தீ வேகமாக லாரி முழுவதும் பரவியது. இந்த தீ விபத்தில் கரும்புகை கிளம்பியதால் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்., போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், லாரியில் இருந்த சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முழுமையாக எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்தில் லாரி ஓட்டுனருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
