கேரள அரசின் ‘பிரியதர்ஷினி’ மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், வருமானம் கடுமையாக பாதிக்கப்படுவதாகக் கூறி திருச்சூர் மற்றும் பாலக்காடு பகுதிகளில் இயங்கும் 200-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளின் சேவையை தற்காலிகமாக நிறுத்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
பெண்களின் அன்றாட பயணச் செலவைக் குறைக்கும் நோக்கில் கேரள அரசு ‘பிரியதர்ஷினி’ என்ற மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் அரசு டவுன் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம். இந்த அறிவிப்பு பெண்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
மறுபுறம், இந்த திட்டம் காரணமாக தனியார் பேருந்துகளின் பயணிகள் எண்ணிக்கை குறைந்து வருவதாக பேருந்து உரிமையாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஒரே வழித்தடங்களில் இயங்கும் பகுதிகளில் வருமான இழப்பு அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக, திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் இயங்கும் 200-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளின் சேவையை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
