கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. இச்சம்பவம் தொடர்பாக தற்போது சி.பி.ஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் தமிழக முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரபாகரன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
“கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. இத்தகைய சூழலில், உயிரிழந்தவர்களின் 41 குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலை வழங்கும் திட்டத்தை முதல்வர் விஜய் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைக்க உள்ளார்.
சி.பி.ஐ விசாரணை நிலுவையில் இருக்கும்போது, அரசுத் தரப்பில் இருந்து வேலைவாய்ப்பு மற்றும் நிவாரணங்கள் வழங்கப்பட்டால், அது வழக்கின் போக்கைத் திசைதிருப்பக் கூடும். மேலும், சாட்சிகள் தங்களின் வாக்குமூலங்களை மாற்றிக்கூற இது வழிவகுக்கும். எனவே, சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை இந்த நிவாரணங்களை வழங்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்.”
இந்த மனு மிக விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதால், அரசு வேலை வழங்கும் நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு ஒருபுறம் இருக்க, தமிழக முதல்வர் விஜய் நாளை கரூருக்குச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் முதல்வர், அங்கிருந்து கார் மூலமாக கரூருக்குப் புறப்படுகிறார். வழிநெடுகிலும் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கரூர் – சேலம் பைபாஸ் சாலையில் உள்ள அட்லஸ் கலையரங்க மைதானத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்று முதல்வர் விஜய் உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாவில், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 32 நபர்களுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை முதல்வர் வழங்க உள்ளார்.
முதல்வர் வருகை மற்றும் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு ஆகிய பரபரப்பான சூழல்களுக்கு மத்தியில் கரூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க சுமார் 6,500 போலீசார் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
