திருச்சியில் நகை பட்டறை உரிமையாளரை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை

திருச்சி நகரில், பெரியசெட்டி தெரு பகுதியில் வசித்து வந்த நகை பட்டறை உரிமையாளரை கட்டிப்போட்டு கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த உதய் என்பவர், “பாலாஜி டெஸ்டிங்” என்ற பெயரில் தங்க நகைகளை பரிசோதித்து, உருக்கி புதிய ஆபரணங்களாக மாற்றும் பட்டறையை நடத்தி வந்தார். தனது குடும்பத்துடன் இரண்டாவது மாடி வீட்டில் வசித்து வந்த இவர், சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. அவரது மனைவி வெளிமாநிலத்திற்குச் சென்றிருந்தார்.

இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்ட மர்ம இளைஞர் ஒருவர் திடீரென வீட்டுக்குள் நுழைந்து உதயை தாக்கியுள்ளார். அவரை தரையில் தள்ளி, வாயில் பிளாஸ்டர் ஒட்டி பேச முடியாதபடி செய்ததுடன், பின்னர் அவரை கழிவறைக்குள் அடைத்து பூட்டிவிட்டார். இதன்பின் வீட்டில் இருந்த பீரோவை திறந்து தங்க நகைகள் மற்றும் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து தப்பிச்சென்றார்.

சில நேரம் கழித்து, உதயிடம் வேலை செய்யும் சிறுவன் வீட்டிற்கு வந்தபோது உள்ளே பொருட்கள் சிதறிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தான். தொடர்ந்து தேடியபோது, தனது முதலாளி கழிவறையில் பூட்டப்பட்டிருப்பதை கண்டுபிடித்து அவரை மீட்டான்.

இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மலைக்கோட்டை போலீசார் விசாரணையை தொடங்கினர். அருகிலுள்ள CCTV காட்சிகள் ஆய்வு செய்யப்படுகின்றன. குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் நடத்தப்படுகிறது.

Latest News