மும்பையில் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு : கனமழையால் முடங்கிய மும்பை

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா, கேரளா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. குறிப்பாக மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து கடுமையாக பாதிப்பு

கனமழை காரணமாக மும்பையின் பல தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் சில பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ரயில் சேவையிலும் பாதிப்பு

மழையுடன் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மும்பை–புனே வழித்தடத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தண்டவாளங்களில் கற்கள் மற்றும் மண் சரிந்ததால் சில ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. சேவைகளை விரைவாக இயல்பு நிலைக்கு கொண்டு வர ரயில்வே அதிகாரிகள் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அலுவலகங்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம்

மோசமான வானிலை நிலையை கருத்தில் கொண்டு, ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்குமாறு தனியார் நிறுவனங்களுக்கு மகாராஷ்டிரா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், அத்தியாவசியமற்ற அரசு அலுவலகங்கள் அரை நாள் மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பல மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை

மகாராஷ்டிரா மட்டுமல்லாமல், கேரளா, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒடிசா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மலைப்பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ள அபாயம் இருப்பதால், சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Post

Latest News