நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் : 9 போலி மாணவர்கள் உட்பட 30 பேர் அதிரடி கைது!

பீகாரில் நடைபெற்ற நீட் மறுதேர்வின் போது, அடுத்தடுத்து அரங்கேறிய ஆள்மாறாட்டம் மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக ஒரே நாளில் 30 பேரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம், லக்கிசராய் பகுதியில் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கும் போலீஸாருக்கும் ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், உண்மையான மாணவர்களுக்குப் பதிலாகப் பணம் வாங்கிக்கொண்டு தேர்வு எழுத வந்த 9 போலி மாணவர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டனர்.

அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கே.ஆர்.கே உயர்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் ஒருவரும், கேந்திரிய வித்யாலயா மையத்தில் 7 பேரும், ஹசன்பூர் பள்ளி தேர்வு மையத்தில் ஒருவருமாக மொத்தம் 9 போலி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்த தேர்வு முறைகேட்டுப் பின்னணியில் இருந்து செயல்பட்ட மேலும் 21 இடைத்தரகர்கள் மற்றும் உடந்தையாக இருந்தவர்களையும் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இதன் மூலம் இந்த முறைகேட்டில் பிடிபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. இந்த மோசடி நெட்வொர்க்கில் இன்னும் பல முக்கியப் பிரமுகர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால், அடுத்தடுத்த நாட்களில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Post

Latest News