குடும்பத் தகராறு காரணமாகப் பிரிந்து சென்ற மனைவியைச் சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வரச் சென்ற கணவனை, அவரது மைத்துனரே பெட்ரோல் ஊற்றி உயிரோடு தீ வைத்துக் கொளுத்திய அதிர்ச்சிச் சம்பவம் பஞ்சாபில் நடந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் தர்ன் தாரன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லவ்பிரீத் சிங். இவருக்கும் இவரது மனைவி சந்தீப் கவுருக்கும் இடையே கடந்த ஜூன் 13ஆம் தேதி கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு சந்தீப் கவுர் தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
பிரிந்து சென்ற மனைவியைச் சமாதானப்படுத்தி மீண்டும் குடும்பம் நடத்த அழைத்து வருவதற்காக லவ்பிரீத் சிங் தனது மாமனார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு இருதரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக வாக்குவாதம் முற்றியுள்ளது.
வாக்குவாதத்தின் போது ஆத்திரமடைந்த லவ்பிரீத் சிங்கின் மைத்துனர் சஜன் சிங், வீட்டில் இருந்த பெட்ரோலை லவ்பிரீத் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இந்த கொடூரத் தீ விபத்தில் லவ்பிரீத் சிங், அவரைக் காப்பாற்ற முயன்ற குர்ஜித் கவுர் மற்றும் தீ வைத்த சஜன் சிங் ஆகிய மூன்று பேர் மீதும் தீ பற்றி எரிந்தது.
அங்கிருந்தவர்கள் உடனடியாக மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் லவ்பிரீத் சிங் மற்றும் குர்ஜித் கவுர் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். குற்றவாளியான சஜன் சிங்கும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் சஜன் சிங் மீது கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெஞ்சை உலுக்கும் இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
