மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நிகழ்ந்த பயங்கர கட்டிட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 16 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 17 பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொல்கத்தாவின் தாரதலா பகுதியில் அமைந்துள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்திற்குச் சொந்தமான இடத்தில், புதிய சேமிப்பு கிடங்கு ஒன்று கட்டப்பட்டு வந்தது. கடந்த புதன்கிழமை அன்று இந்த கட்டுமானப் பணியில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக அந்த கட்டிடத்தின் ராட்சத மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அப்போது, அங்கு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
தகவல் அறிந்து பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளைத் தொடங்கினர். கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து 17 தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் ஏற்கனவே 15 பேர் உயிரிழந்திருந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு தொழிலாளி இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
