5-ஆவது நாளாக மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை : 6 விமானங்கள் ரத்து!

மகாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்து, கடந்த சில நாட்களாகக் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துச் சேவைகளும் முடங்கியுள்ளன.

மும்பையில் கடந்த ஜூன் 23-ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. ஆரம்பத்தில் மிதமாக இருந்த மழை, கடந்த நான்கு நாட்களாகத் தீவிரமடைந்தது. 5-ஆவது நாளான இன்று விடிய விடியப் பலத்த மழை வெளுத்து வாங்கியது.

இதன் காரணமாக மும்பையின் தாதர், குர்லா, அந்தேரி மற்றும் தாராவி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ரயில் பயணிகள் கவனத்திற்கு: ஞாயிற்றுக்கிழமைகளில் 41 மின்சார ரயில்கள் ரத்து!

இந்நிலையில், மும்பை, தானே மற்றும் பால்கர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மோசமான வானிலை காரணமாகச் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மும்பையில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக மும்பை, சென்னை மற்றும் அந்தமான் ஆகிய நகரங்களுக்கு இடையே இயக்கப்பட வேண்டிய 6 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Related Post

Latest News