நேற்று அதிகாலை, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் கள்ளக்குறிச்சி நோக்கிப் புறப்பட்ட அரசுப் பேருந்து ஒன்று, சங்கராபுரம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து, சாலையோரத் தடுப்புகளை மீறி மேம்பாலத்தின் பக்கவாட்டுத் தடுப்புச் சுவரில் பலமாக மோதியது.
மோதிய வேகத்தில் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு, மேம்பாலத்தின் விளிம்பில், அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. இதனால் பேருந்தின் உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பேருந்தின் உள்ளே சிக்கித் தவித்த பயணிகள் அனைவரையும் ஒவ்வொன்றாகப் பத்திரமாக மீட்டனர்.
பயணிகள் அனைவரும் எந்தவிதக் காயமுமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். அதன் பின்னர், மாற்றுப் பேருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, பயணிகள் அனைவரும் கள்ளக்குறிச்சிக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
