மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த ஜார்ஜ் குரியன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
ராஜினாமாவிற்கான முக்கிய பின்னணி என்ன?
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது மத்திய அமைச்சரவையில், கேரளாவைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் ஜார்ஜ் குரியனுக்கு இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதற்காக அவர் மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரது பதவிக்காலம் கடந்த ஜூன் 21-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. பொதுவாக அமைச்சராக நீடிக்க நாடாளுமன்றத்தின் ஏதேனும் ஒரு அவையில் உறுப்பினராக இருப்பது கட்டாயமாகும். ஆனால், ஜார்ஜ் குரியனுக்கு மீண்டும் எம்.பி. வாய்ப்பை வழங்க கட்சித் தலைமை முன்வரவில்லை. இதன் காரணமாகவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அவர் அனுப்பிய நிலையில், அது உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஜார்ஜ் குரியனின் அரசியல் பயணம்
65 வயதாகும் ஜார்ஜ் குரியன், 1980-ஆம் ஆண்டு முதல் பாஜகவில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். கேரள பாஜகவின் முக்கிய முகமாக திகழும் இவர், தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காஞ்சிரப்பள்ளி தொகுதியில் போட்டியிட்டு இவர் தோல்வியடைந்தார். இந்தத் தேர்தல் தோல்வியின் காரணமாகவே, பாஜக தலைமை இவருக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்க மறுத்துவிட்டதாக பேசப்பட்டது. பதவி விலகலுக்குப் பின் பேசிய ஜார்ஜ் குரியன், “எனக்கு மத்திய அமைச்சர் வாய்ப்பளித்த பிரதமர் மோடிக்கு என் வாழ்நாள் நன்றிகள்” என சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.
