14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து ரோட்டில் வீசிய கும்பல் : மேற்குவங்கத்தில் அதிர்ச்சி சம்பவம்

மேற்கு வங்க மாநிலம் துர்காபூர் சிட்டி சென்டர் பகுதியில் 14 வயது 8ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை மதியம் சுமார் 1:30 மணியளவில், சிறுமியின் குடும்பத்திற்கு அறிமுகமான சிம்ரன் தமாங் என்ற பெண், சிறுமியிடம் ஆசைவார்த்தைகள் கூறி வெளியே அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் காரில் வைத்து சிறுமிக்கு தெரியாமல் குளிர்பானத்தில் மயக்க மருந்தும் மதுவும் கலந்து கொடுத்துள்ளனர். இதனால் சிறுமி சுயநினைவை இழந்துள்ளார்.

அதன்பின், கவிகுரு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி அங்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் இரவு சுமார் 10:30 மணியளவில், சிறுமியை சாலையோரம் வீசிவிட்டு குற்றவாளிகள் தப்பியோடியுள்ளனர்.

தற்போது அந்த சிறுமி தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் விதிமுறைகளை மீறி ஹோட்டல் அறை வழங்கிய மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒரு குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Post

Latest News