குறைந்த விலைக்குத் தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்த வழக்கில், ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல ‘கோல்டுமேன்’ சுரேஷ்குமார் என்பவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத்தின் ஓல்டு சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் பல்லபு சுரேஷ்குமார். இவர் எப்போதும் தனது உடலில் கிலோ கணக்கில் அதிகமான தங்க நகைகளை அணிந்து கொண்டு வலம் வருவதை வழக்கமாகக் கொண்டவர். இதனால் அந்தப் பகுதியில் இவர் ‘கோல்டுமேன் சுரேஷ்குமார்’ என்றே பிரபலமாக அழைக்கப்பட்டு வந்தார்.
சுரேஷ்குமார், பொதுமக்களிடம் ஒரு கவர்ச்சிகரமான திட்டத்தைக் கூறியுள்ளார். வெளிநாடுகளில் இருந்து மிகக் குறைந்த விலைக்குத் தங்கம் இறக்குமதி செய்து தருவதாகப் பலரிடமும் ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளார். இதை நம்பிய பலரும் அவரிடம் லட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்துள்ளனர்.
பல்வேறு நபர்களிடம் இருந்து சுமார் ரூ.32 லட்சம் வரை சுரேஷ்குமார் வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்டு நீண்ட நாட்களாகியும் அவர் கூறியபடி தங்கத்தை வாங்கிக் கொடுக்காமல், தொடர்ந்து காலம் தாழ்த்தி ஏமாற்றி வந்துள்ளார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபர்கள், உடனடியாக காவல் நிலையம் சென்றனர். சுரேஷ்குமார் தங்களை நம்ப வைத்து ரூ.32 லட்சம் வரை மோசடி செய்துவிட்டதாக ஆதாரங்களுடன் புகார் அளித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி ‘கோல்டுமேன்’ சுரேஷ்குமாரை அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடம் இந்த மோசடிப் பின்னணியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பது குறித்துப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
