நாளையுடன் ஓய்கிறது தேர்தல் பிரசாரம்

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், த.வெ.க. ஆகிய கட்சிகள் இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலில் வாக்களிக்க 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் தயாராக உள்ளனர். 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டு தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் வீதியெங்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், த.வெ.க. தலைவர் விஜய் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அரசியல் கட்சிகளின் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தை முடிக்கிறார். எடப்பாடி பழனிசாமி சேலம் எடப்பாடி தொகுதியிலும், விஜய் சென்னை நந்தனம் பகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்கள்.

பிரசாரம் முடிந்ததும், வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இவ்வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள் தொடங்கப்படுகின்றன.

மேலும், வாக்காளர்களுக்கு வீடு தோறும் பூத் சிலிப் வழங்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட ஊழியர்கள் மேற்கொள்வார்கள்.

Latest News