திமுக, 1967ம் ஆண்டிலும், அதிமுக 1977ம் ஆண்டிலும் ஆட்சிக்கு வந்த நிலையில், அன்றில் இருந்து இரு கட்சிகளே தமிழகத்தை மாறி மாறி ஆட்சி நடத்தி வந்தனர். இந்த சூழலில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக, 108 இடங்களை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.
ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காத சூழலில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், IMUL கட்சிகளின் ஆதரவுடன் நேற்று தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றுக்கொண்டார்.
விஜய் பதவியேற்ற பிறகு நடைபெற்ற முதல் சட்டசபைக் கூட்டத்தில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். ஆனால், அந்த நிகழ்வை விட அதிகமாக பேசப்பட்டது திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் அருகருகே அமர்ந்த காட்சிதான். கடந்த பல ஆண்டுகளாக தமிழக அரசியலை மாறி மாறி வழிநடத்திய இந்த இரு கட்சிகளும், தற்போது ஆட்சிக்கு வெளியே ஒரே தரப்பில் இருப்பது அரசியல் மாற்றத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
ஒரே வரிசையில் திமுக, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமர்வது இதுவே முதல் முறை. அதே போல, அதிமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதும் இதுவே முதல் முறை.
