நூறு ரூபாயால் ஏற்பட்ட தகராறு : தூங்கிக் கொண்டிருந்த கணவன் மீது தீ வைத்த மனைவி

உத்தரப் பிரதேசத்தில் ரூ.100 பணம் தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பதேபூர் மாவட்டத்தில் உள்ள தாராபூர் கிராமத்தைச் சேர்ந்த 49 வயதான அவதேஷ். இவரது மனைவி பிரித்தி தேவி (45). குழந்தைகள் இல்லாத இந்த தம்பதியருக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பவம் நடந்த இரவு, ரூ.100 பணம் தொடர்பாக இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மது அருந்தியிருந்த கணவர், மனைவியை இழிவுபடுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வாக்குவாதத்துக்குப் பிறகு கணவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஆத்திரமடைந்த மனைவி அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நள்ளிரவில் வீட்டிலிருந்து புகை வெளியேறியதை கவனித்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு கணவர் தீயில் கருகி உயிரிழந்த நிலையில் இருந்ததை கண்டறிந்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பிரித்தி தேவியை போலீசார் கைது விசாரித்து வருகின்றனர்.

Related Post

Latest News