சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய கழிவறையில் பெண் ஒருவர் குளிப்பதை ரகசியமாக தனது செல்போனில் வீடியோ எடுத்த வாலிபரை ரயில்வே போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கினார். அப்போது, பெண்கள் காத்திருப்போர் அறை பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டிருந்ததால், ஆண்கள் காத்திருப்பு அறையில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட கழிவறையில் அந்த பெண் குளிக்க சென்றார்.
அவர் குளித்துக் கொண்டிருந்த சமயத்தில், அருகில் இருந்த மற்றொரு கழிவறையில் மறைந்திருந்த நபர் ஒருவர், தனது செல்போன் மூலமாக அந்தப் பெண்ணை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.
பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, கழிவறைக்கு வெளியே காத்திருந்த அவரது குடும்பத்தினரும், சக பயணிகளும் தப்பியோட முயன்ற அந்த நபரை மடக்கிப் பிடித்து சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர் வேலூர் மாவட்டம் கீழந்தூர் பகுதியைச் சேர்ந்த அருண் (வயது 27) என்பது தெரியவந்தது. மேலும், இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேனாகப் பணியாற்றி வருவதும் விசாரணையில் அம்பலமானது.
இதையடுத்து, பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அருண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
