டெங்கு தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் : எப்படி பயன்படுத்த வேண்டும்?

மழைக்காலம் தொடங்கும் போது அதிகம் பரவும் நோய்களில் டெங்கு காய்ச்சலும் ஒன்று. கொசு கடியால் பரவும் இந்த வைரஸ் நோய், பெரும்பாலானவர்களுக்கு லேசான பாதிப்பை ஏற்படுத்தினாலும், சிலருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையை உருவாக்கக்கூடும்.

கடுமையான காய்ச்சல், கடுமையான தலைவலி, உடல், தசை மற்றும் மூட்டுவலி, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை டெங்கு காய்ச்சலின் அறிகுறியாகும். ஆண்டுதோறும் 10 கோடி முதல் 40 கோடி பேர் வரை டெங்கு தொற்றால் பாதிக்கப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த சூழலில், டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் வகையில் டெங்கு தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஜப்பானில் தயாரிக்கப்பட்டுள்ள ‘க்யூடெங்கா’ என்ற தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

‘க்யூடெங்கா’ தடுப்பூசி இரண்டு டோஸ்களாக வழங்கப்படுகிறது. முதல் டோஸ் செலுத்தப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் செலுத்த வேண்டும். இந்த தடுப்பூசி இந்தியாவுக்கு முன்பே உலகின் 42 நாடுகளில் பயன்பாட்டிற்கு அனுமதி பெற்றுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் இதுவரை 2.4 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதுவரை குறிப்பிடத்தக்க பாதுகாப்பு சிக்கல்கள் எதுவும் பதிவாகவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Post

Latest News