நயினார் நாகேந்திரன் மீது தி.மு.க. தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

கடந்த 2024ம் ஆண்டு தாம்பரத்தில் நெல்லை விரைவு ரெயிலில் ரூ.4 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இந்த விவகாரம், அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பணம், நெல்லை தொகுதி பா.ஜ.க. வேட்பாளரான நயினார் நாகேந்திரன் சார்பில் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்தப் பணம் அவரது ஓட்டல் ஊழியரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினரான கிரிராஜன், இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக குற்றம்சாட்டி, அமலாக்கத்துறை (ED) வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஏற்கனவே சிபிசிஐடி இந்த வழக்கில் நயினார் நாகேந்திரன் மற்றும் மற்றொருவரான கேசவ விநாயகம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில் , தி.மு.க. எம்.பி. தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்துவது அதிகாரிகளின் பொறுப்பு என நீதிமன்றம் கூறியது.

Latest News