தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் : தேதி அறிவிப்பு

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். பின்னர், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

இதற்கிடையில், சட்டசபையில் த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தனர். இதன் காரணமாக திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளும் காலியாக உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தேர்தல் விதிகளின்படி, ஒரு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அடுத்த மாதம் (ஜூலை) இறுதியில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆகஸ்டு மாதத்தில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

Related Post

Latest News