வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பல்வேறு வழக்குகள் நிமித்தமாக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இந்த நீதிமன்றத்திற்கு மர்ம நபர் ஒருவரிடமிருந்து மின்னஞ்சல் மூலம் ஒரு மிரட்டல் செய்தி வந்துள்ளது. அதில், நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது திங்கட்கிழமை அன்று பயங்கர சத்தத்துடன் வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மிரட்டல் செய்தி நீதிமன்ற நிர்வாகத்தினருக்கு அதிர்ச்சியை அளித்தது.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு நிபுணர் குமார் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சத்துவாச்சாரி காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான போலீசாரும் நீதிமன்ற வளாகத்தைப் பாதுகாப்புக் வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.
இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து சத்துவாச்சாரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலின் ஐபி முகவரியை அடிப்படையாகக் கொண்டு, சைபர் க்ரைம் போலீசாரின் உதவியுடன் மிரட்டல் விடுத்த நபர் யார், எந்தப் பகுதியில் இருந்து இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
