நாமக்கல் மாவட்டத்தில் அரசு அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த 22 தனியார் பள்ளிகளில் இந்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் மட்டுமே குழந்தைகளை சேர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டு வந்த 22 தனியார் பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. நடப்பு 2026-2027 கல்வியாண்டில் இந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டத்தில் மொத்தம் 237 தனியார் பள்ளிகள் அரசு அனுமதியுடன் இயங்கி வருகின்றன. ஆனால் சில பள்ளிகள் தேவையான அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வந்ததாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகங்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டதுடன், அனுமதி பெறுவதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்காததால், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எல்.கே.ஜி. முதல் எந்த வகுப்பிலும் புதிய மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்றும், அரசின் உத்தரவை மீறி பள்ளிகள் செயல்பட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன் அந்த பள்ளி அரசு அங்கீகாரம் பெற்றதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்ட 22 தனியார் பள்ளிகள்:
நாமக்கல் டைம் கிட்ஸ் நர்சரி ஸ்கூல்,
ஏபிசி கிட்ஸ்,
ஹனி பனி கிட்ஸ்,
ஆரஞ்சு அகாடமி,
சன் பிளவர்,
அக்ஸ்ரம்,
ஸ்பார்க்கில் அகாடமி,
யுரோ கிட்ஸ்,
மகிழம்,
துளிர்,
ஸ்கூல் ஆப் மாண்ட்டசரி,
செல்லப்பம்பட்டி ஸ்மைலிஸ் வித்யாஷ்ரமம்,
எர்ணாபுரம் ஆல்பாபெட்ஸ் பிரி ஸ்கூல்,
நல்லிபாளையம் தீக்ஷா விஷனரி பள்ளி,
சேந்தமங்கலம் துலிப் கார்டன் நர்சரி பள்ளி,
பொத்தனூர் ஆப்பிள் நர்சரி பள்ளி,
எருமப்பட்டி காவேரி மழலையர் பள்ளி,
பள்ளிபாளையம் கோல்டன் நர்சரி பள்ளி,
கலைவாணி நர்சரி பள்ளி,
எவர்கிரீன் இண்டர்நேசனல் நர்சரி பள்ளி,
பவித்திரம் எஸ்.எம்.எஸ் நர்சரி பள்ளி,
என்.கந்தம்பாளையம் காந்தி சிபிஎஸ்இ பள்ளி
ஆகிய 22 பள்ளிகளில் பொதுமக்கள் யாரும் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
