போலி தாசில்தார் ரப்பர் முத்திரை தயாரித்து நில அபகரிப்பு முயற்சி; நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே உள்ள கீழசூர் கிராமத்தைச் சேர்ந்த கபீர் முகமது மற்றும் அவரது சகோதரர்கள், தங்களுக்குச் சொந்தமான பூர்வீக நிலத்தை அபகரிக்க முயற்சி நடைபெறுவதாக குற்றம்சாட்டி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸிடம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.

அந்த மனுவில், கீழசூர் கிராமத்தில் சர்வே எண்கள் 1, 4/1, 5 மற்றும் 6/1-ல் அமைந்துள்ள தங்களது பூர்வீக நிலத்தை சுகுமார் மற்றும் அவரது சகோதரர்களான அசோக் குமார், மணவாளன் ஆகியோர் சட்டவிரோதமாக அபகரிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிலத்தை கைப்பற்றும் நோக்கில் மிரட்டல், வன்முறை உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவதுடன், சுகுமார் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், போலி பட்டா ஆவணங்கள் மற்றும் போலி தாசில்தார் ரப்பர் முத்திரையை தயாரித்து, அவற்றை பயன்படுத்தி நிலத்தை அபகரிக்க முயற்சி செய்து மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்திருந்த போதிலும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சுகுமார், அவரது சகோதரர்கள் மற்றும் இந்த மோசடிக்கு உடந்தையாக செயல்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களது குடும்பத்தினரின் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ், புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததாக மனுதாரர்கள் கூறினர்.

Related Post

Latest News