சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு அதிரடியான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றது. குறிப்பாக, அதிமுகவில் இருந்து அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருவது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், இன்று மேலும் ஒரு முக்கிய நிர்வாகி கட்சியை விட்டு வெளியேறியுள்ளார்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான பொன் ஜெயசீலன், தனது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பான தனது அதிகாரப்பூர்வ விலகல் கடிதத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் அனுப்பியுள்ளார்.
அதிமுகவில் இருந்து விலகியுள்ள பொன் ஜெயசீலன், அடுத்ததாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தொடர்ச்சியாக அதிமுகவில் இருந்து பலர் வெளியேறியிருப்பது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தலைமைக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
