நெஞ்சுவலியால் துடித்த நோயாளிக்கு இ.சி.ஜி. எடுத்த காவலாளி : அரசு மருத்துவமனையில் பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனையில், நெஞ்சுவலியால் துடித்த நோயாளி ஒருவருக்கு அங்கிருந்த காவலாளி இ.சி.ஜி எடுத்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அரசு தாலுகா மருத்துவமனை ஒன்று உள்ளது. கடந்த ஜூலை 5-ஆம் தேதி நள்ளிரவில், கடுமையான நெஞ்சுவலி காரணமாக நோயாளி ஒருவர் இந்த மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டுள்ளார்.

அப்போது, மருத்துவமனையில் மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை என்றும், இரு செவிலியர்கள் மட்டுமே பணியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், அங்கிருந்த ரஞ்சித் என்ற காவலாளி, நோயாளிக்கு இ.சி.ஜி எடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆலங்குடி அரசு மருத்துவமனையில் இதுபோன்ற அலட்சியச் சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல என்கின்றனர் அப்பகுதி மக்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, விபத்தில் காயமடைந்து ரத்தக் காயங்களுடன் வந்த நோயாளி ஒருவருக்கு, மருத்துவமனையில் சமையல் வேலை செய்யும் பெண் ஒருவர் தையல் போட்ட அதிர்ச்சி வீடியோ வெளியாகி ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது.

அந்த சர்ச்சை அடங்குவதற்குள், தற்போது காவலாளி ஒருவர் உயிர்காக்கும் இ.சி.ஜி பரிசோதனையைச் செய்திருப்பது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

Latest News