தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான யோகி பாபு, தற்போது திரையுலகில் மிகவும் பிசியான நடிகராக வலம் வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், தல அஜித் எனப் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து கலக்கிய இவர், சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து முத்திரை பதித்துள்ளார்.
இந்நிலையில், யோகி பாபு தனது சினிமா பயணத்தில் இதுவரை இல்லாத அளவாக, ஒரே திரைப்படத்தில் 11 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
பிரபல இயக்குநர் மோகன் ராஜாவிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த ஆர். கிஷோர் குமார், இந்தத் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இத்திரைப்படம், தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மற்றும் இந்தி மொழிகளிலும் பான்-இந்தியா அளவில் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் யோகி பாபுவுடன் இணைந்து பிரபல நகைச்சுவை நடிகர்களான ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், நடிகை அதிதி ரவி, பஞ்சு சுப்பு மற்றும் இயக்குநர் ஏ. வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
