5-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் பாடல் இடம்பெற்றதால் சர்ச்சை

ஒடிசா மாநிலத்தில் அரசு வெளியிட்ட 5-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிரபல இந்தி திரைப்படப் பாடல் இடம்பெற்றிருப்பது கல்வித்துறையில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் ஒடிசா அரசு, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடப்புத்தகங்களை வெளியிட்டது. அந்தப் புத்தகத்தை ஆய்வு செய்த சிலர், 1999-ஆம் ஆண்டு வெளியான ‘ஹம் தில் தே சுகே சனம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற, நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்த பிரபலமான ‘நிம்புடா நிம்புடா’ பாடல் அச்சிடப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். இது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதுடன், கல்வியாளர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, ஒடிசா மாநில பள்ளி மற்றும் மக்கள் கல்வித் துறை அமைச்சர், பாடப்புத்தகங்களில் உள்ள அனைத்து பிழைகளும் விரைவில் திருத்தப்பட்டு, சரிசெய்யப்பட்ட பிரதிகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

மேலும், இந்த தவறு எவ்வாறு நிகழ்ந்தது என்பதை கண்டறிய தனிப்பட்ட விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், பொறுப்புக்கூற வேண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

Related Post

Latest News