தில்ஜித் தோசன்ஜ் நடிப்பில், ஹனி ட்ரீஹான் இயக்கத்தில் உருவான ‘சட்லஜ்’ திரைப்படம் கடந்த ஜூலை 3-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் எவ்வித முன் அறிவிப்போ, விளம்பரங்களோ இல்லாமல் வெளியானது. ஆனால், வெளியான 48 மணி நேரத்திற்குள், அந்த ஓடிடி தளத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டது.
பல ஆண்டுகளாக தணிக்கை வாரியத்தின் சிக்கலில் தவித்து, ஒருவழியாக ஓடிடியில் வெளியான இப்படம் உடனடியாக நீக்கப்பட்டது ஏன்? இதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
யார் இந்த ஜஸ்வந்த் சிங் கல்ரா?
‘சட்லஜ்’ திரைப்படத்தின் மையக்கதை என்ன என்பதைப் புரிந்து கொள்ள, சமூக செயற்பாட்டாளர் ஜஸ்வந்த் சிங் கல்ரா பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.
1980 மற்றும் 1990-களின் காலகட்டத்தில் பஞ்சாபில் காலிஸ்தான் பிரிவினைவாதப் போராட்டங்கள் தீவிரமாக இருந்தன. அப்போது, காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட பல சீக்கியர்கள் மர்மமான முறையில் மாயமாகினர். அவ்வாறு மாயமான சுமார் 25,000 பேர் சட்டத்திற்குப் புறம்பாகக் கொல்லப்பட்டு, ‘அடையாளம் காணப்படாத உடல்கள்’ என்ற பெயரில் எரிக்கப்பட்டதாக மனித உரிமைகள் போராளி ஜஸ்வந்த் சிங் கல்ரா ஆதாரங்களுடன் குற்றம் சாட்டினார்.
இவரது புலனாய்வு ஆதாரங்கள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த நிலையில், 1995-ம் ஆண்டு கல்ரா திடீரென மாயமாகி, பின்னர் கொல்லப்பட்டார். இந்த மர்ம மரணம் குறித்து சிபிஐ நடத்திய விசாரணையில், டார்ன் டரன் காவல் நிலையத்தைச் சேர்ந்த 9 போலீசார் மீது கடத்தல் மற்றும் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து 2007-ல் நீதிமன்றம் இவர்களுக்கான தண்டனையை ஆயுள் தண்டனையாக உயர்த்தியது. இந்த உண்மைச் சம்பவங்களைத் தழுவியே ‘சட்லஜ்’ படம் உருவாக்கப்பட்டுள்ளது.
தணிக்கை வாரியத்தின் முட்டுக்கட்டைகள்
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதால், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) இப்படத்திற்குப் பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டது. முதலில் இப்படத்திற்கு வைக்கப்பட்டிருந்த ‘பஞ்சாப் 95’ என்ற பெயரை ‘சட்லஜ்’ என மாற்றச் சொன்னது.
படத்தில் 21 காட்சிகளை நீக்க (Cuts) பரிந்துரைத்ததுடன், 127 திருத்தங்களையும் செய்யக் கோரியது. இதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த இயக்குநர் ஹனி ட்ரீஹான், “படத்தில் ஜஸ்வந்த் சிங் கல்ரா என்ற உண்மையான பெயரைக் கூட நீக்கச் சொல்கிறார்கள். 127 திருத்தங்கள் என்பது படைப்புச் சுதந்திரத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் நடத்தப்படும் தாக்குதல்” என்று சாடினார். இதனால் படம் வெளியாகாமல் போனது.
ஓடிடி தளத்திலிருந்து நீக்கம்
பொதுவாக, திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு மட்டுமே தணிக்கைச் சான்றிதழ் கட்டாயம், ஓடிடியில் நேரடியாக வெளியாகும் படங்களுக்கு அது தேவையில்லை என்ற விதிமுறை உள்ளது. இதனைப் பயன்படுத்திதான் படக்குழுவினர் ஜீ5 தளத்தில் படத்தை வெளியிட்டனர்.
இருப்பினும், மத்திய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, 2021-ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப (IT) சட்டத்தைச் சுட்டிக்காட்டி படத்தை ஓடிடி தளத்திலிருந்து நீக்கச் செய்துள்ளது. ஓடிடி தளங்கள் அனைத்தும் இந்த ஐடி சட்டங்களைப் பின்பற்றுவது கட்டாயம் என்பதால் ஜீ5 நிறுவனம் படத்தை நீக்கியுள்ளது.
படம் நீக்கப்பட்டாலும், இணையத்தில் ‘சட்லஜ்’ திரைப்படத்திற்கு ஆதரவாக நேர்மறையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. பல முன்னணி ஊடகங்கள் இப்படத்தைப் பாராட்டியுள்ளன. ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டாலும், ‘சட்லஜ்’ கிளப்பியுள்ள விவாதங்கள் இன்னும் ஓயவில்லை.
