மது பாட்டிலுக்காக போராடிய நபர்., நீதிமன்றம் வரை சென்ற பிரச்சனை. என்ன நடந்தது?

தனிநபர்கள் தங்களது சொந்தப் பயன்பாட்டிற்காக ஒரு குறிப்பிட்ட அளவு மதுபானங்களை வைத்திருக்கத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், விதிகளுக்குப் புறம்பாகப் பதியப்பட்ட ஒரு வழக்கினைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வல்லரசு என்பவர், புதுச்சேரி – தமிழக எல்லையில் உள்ள சோதனைச் சாவடி வழியாக வாகனத்தில் வந்தபோது போலீசார் அந்த நபரை சோதனையிட்டனர். அப்போது அவரிடம் புதுச்சேரியில் வாங்கப்பட்ட 1 லிட்டர் 680 மில்லி அளவு கொண்ட 3 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து மதுபாட்டில்களைக் கடத்தி வந்ததாகக் கூறி, அவர் மீது கடலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வல்லரசு மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம். நிர்மல்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இந்த விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம். பாலாஜி “தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின்படி, ஒரு தனிநபர் தனது சொந்தப் பயன்பாட்டிற்காக 4.5 லிட்டர் வரை மதுபானம் வைத்திருக்க அனுமதி உண்டு. மனுதாரர் வைத்திருந்தது வெறும் 1.680 லிட்டர் மட்டுமே. எனவே, இது சட்டவிரோதமானது அல்ல.” என வாதாடினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “அரசின் விதிமுறைக்கு முரணான நடவடிக்கை” எனக் கூறி வழக்கைத் ரத்து செய்து உத்தரவிட்டார்.

Latest News