பெட்ரோல் பங்க்கிற்குள் நுழைந்த ஒற்றை யானை! கதறும் மக்கள்! காட்பாடி எல்லையில் பரபரப்பு!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள தமிழக ஆந்திர மாநில எல்லைப் பகுதியான சித்தூர் மாவட்டம் குடிப்பாலா மண்டலம் நரால்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கிற்குள் திடீரென ஒற்றைக் காட்டு யானை ஒன்று நுழைந்துள்ளது.

வழக்கம்போல் ஊழியர்கள் பணியில் இருந்தபோது, திடீரென சாலையைக் கடந்து வந்த இந்த பிரம்மாண்ட காட்டு யானை, பெட்ரோல் பங்க் வளாகத்திற்குள் மிகவும் நிதானமாக உலா வந்துள்ளது. இதைப் பார்த்த ஊழியர்களும், அங்கிருந்த பொதுமக்களும் அச்சத்தில் உறைந்து போயினர்.

அதிர்ஷ்டவசமாக இந்த யானை யாருக்கும் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல், அங்கிருந்து மெதுவாக நகர்ந்து அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்றுள்ளது தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

தற்போது கோடைக்காலம் மற்றும் போதிய மழையில்லாத காரணத்தினால், வனப்பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. காடுகளுக்குள் இருக்கும் இயற்கை நீர்நிலைகள் அனைத்தும் முற்றிலும் வறண்டுவிட்டதால், குடிக்கக் கூட சொட்டுத் தண்ணீர் இல்லாமல் காட்டு விலங்குகள் தவித்து வருகின்றன.

குறிப்பாக, யானைகள் தங்களது தாகத்தைத் தணித்துக் கொள்வதற்காகவும், தண்ணீர் நிலைகளைத் தேடியும்தான் காட்டை விட்டு வெளியேறி, மனிதர்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும், விவசாய நிலங்களுக்குள்ளும் புகுந்து விடுகின்றன.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வனத்துறையினருக்கு அவசர கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.

“வனப்பகுதிகளில் ஆங்காங்கே செயற்கை நீர்நிலை தொட்டிகளை அமைத்து, அதில் லாரிகள் மூலம் தமிழக மற்றும் ஆந்திர வனத்துறையினர் கூட்டாக முயற்சி செய்து தினசரி தண்ணீர் நிரப்ப வேண்டும். காடுகளிலேயே விலங்குகளுக்குத் தேவையான தண்ணீர் கிடைத்துவிட்டால், அவை நிச்சயம் ஊருக்குள் வராது. இதனால் மனித – விலங்கு மோதல்களையும், பயிர் சேதங்களையும் முழுமையாகத் தடுக்க முடியும்” என்று அவர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர்.

மனித உயிர்களுக்கும், விவசாய பயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் முன், வனத்துறையினர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Post

Latest News