தமிழக சட்டப்பேரவையில் கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததாகக் கூறப்பட்ட 21 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கையை சபாநாயகர் கைவிட்டது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
25 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக புகார்
தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 13-ஆம் தேதி நம்பிக்கை தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறி, 25 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தகுதிநீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, அந்த 25 பேரில் 4 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். மீதமிருந்த 21 எம்.எல்.ஏ.க்களும் மன்னிப்பு கோரி கடிதம் அளித்தனர். இதையடுத்து, அவர்களுக்கு எதிராக தகுதிநீக்க நடவடிக்கை கோரி அளித்த மனுவை திரும்பப் பெறுவதாக எடப்பாடி பழனிசாமி சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினார்.
21 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான நடவடிக்கை கைவிடப்பட்டது
எடப்பாடி பழனிசாமியின் கடிதத்தை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், 21 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கையை கைவிடுவதாக உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் செல்வகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
மனுதாரர் தரப்பில் என்ன வாதம்?
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சக்திவேல், கொறடா உத்தரவை மீறி வாக்களித்த உறுப்பினர்களை அரசியல் கட்சிகள் மன்னிக்க முடியாது என்று வாதிட்டார்.
கொறடா உத்தரவை மீறியதன் மூலம் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் தங்களது பதவியை தாங்களாகவே இழக்கும் நிலை ஏற்பட்டதாகவும், பின்னர் அவர்களிடம் இருந்து பெறப்பட்ட மன்னிப்பை அடிப்படையாகக் கொண்டு தகுதிநீக்க நடவடிக்கையை கைவிட்டது அரசியலமைப்பின் அடிப்படைக்கே முரணானது என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
அரசுத் தரப்பு விளக்கம்
அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, இது அரசியல் கட்சிக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் இடையிலான விவகாரம் என்று தெரிவித்தார்.
கட்சியின் பொதுச்செயலாளர் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களை மன்னித்துள்ளதால், அவர்கள் மீண்டும் கட்சி உறுப்பினர்களாக தொடர்ந்து செயல்படுகின்றனர் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக மூன்றாம் நபர் ஒருவர் பொதுநல வழக்கு தொடர முடியாது என்றும் அவர் வாதிட்டார்.
“இதில் என்ன தவறு உள்ளது?” – நீதிபதிகள் கேள்வி
வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள், கொறடா உத்தரவை மீறி வாக்களித்த உறுப்பினர்களை கட்சி மன்னித்துள்ள நிலையில், அவர்கள் தொடர்ந்து கட்சி உறுப்பினர்களாகவே இருப்பதாகக் குறிப்பிட்டனர்.
மேலும், சம்பந்தப்பட்ட 21 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்யவில்லை என்றும், மனுதாரர் மூன்றாம் நபர் என்றும், கட்சியே இந்த நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தை அணுகவில்லை என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
சட்டப்படி 15 நாட்களுக்குள் மன்னிப்பு வழங்கப்பட்டு, தகுதிநீக்க நடவடிக்கையை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனை சபாநாயகரும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், இதில் என்ன தவறு உள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
