பெண் சப்-இன்ஸ்பெக்டரை கன்னத்தில் அறைந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகள் மீது வழக்கு!

கர்நாடக மாநிலத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டரை பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் மகள் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் துமகூரு புறநகர் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேஷ் கவுடா. இவரது மகள் ஐஸ்வர்யா. இவர் கடந்த 12-ஆம் தேதி பீமா அமாவாசையை முன்னிட்டு மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள புகழ்பெற்ற லட்சுமி நரசிம்மசாமி கோவிலுக்குச் சென்றுள்ளார்.

அப்போது கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால், ஐஸ்வர்யா தனது அதிகார பலத்தைப் பயன்படுத்தி வி.ஐ.பி. வரிசை வழியாக கருவறைக்குள் நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஐஸ்வர்யாவைத் தடுத்து நிறுத்தினார். கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், ஒருவரை மட்டும் தனியாக அனுமதிக்க முடியாது என கூறியுள்ளார்.

இதனால் ஐஸ்வர்யா, சப்-இன்ஸ்பெக்டருடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஐஸ்வர்யா பெண் சப்-இன்ஸ்பெக்டரைத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அவரது கன்னத்திலும் அறைந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தால் கோவில் வளாகத்தில் திடீர் பரபரப்பும் சலசலப்பும் ஏற்பட்டது.

பணியில் இருந்தபோதே தாக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் சவிதா, இச்சம்பவம் குறித்து கியாதனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில், அரசு பெண் அதிகாரியைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட தீவிரப் பிரிவுகளின் கீழ் எம்.எல்.ஏ. மகள் ஐஸ்வர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

Latest News