மதுரையில் இருந்து ராமேசுவரம் நோக்கி இயக்கப்பட்ட சிறப்பு ரெயில், கீழ்மதுரை ரெயில் நிலையத்தில் நிற்காமல் சென்ற சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 3 பேர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
ராமேசுவரம் கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா நடைபெற்று வரும் நிலையில், ஆடி அமாவாசையையொட்டியும் ஏராளமான பக்தர்கள் ராமேசுவரம் சென்றனர். பக்தர்களின் பயண வசதிக்காக மதுரையில் இருந்து ராமேசுவரம் வரை முழுவதும் பொதுப்பெட்டிகளைக் கொண்ட சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.
சிறப்பு ரெயில்கள் கீழ்மதுரை, திருப்புவனம், மானாமதுரை, பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்நிலையில், மதுரையில் இருந்து ராமேசுவரம் நோக்கி சென்ற சிறப்பு ரெயில் கீழ்மதுரை ரெயில் நிலையத்தில் நிற்காமல் கடந்து சென்றது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, மதுரையில் இருந்து ராமேசுவரம் சென்ற சிறப்பு ரெயிலின் என்ஜின் டிரைவர், உதவி டிரைவர் மற்றும் ரெயில் கார்டு ஆகிய 3 பேர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க மதுரை கோட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
