தமிழ் மாதங்களில் ஆடி மாதம் ஆன்மிக ரீதியாகவும் வழிபாட்டு ரீதியாகவும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மாதத்தில் வரும் ஆடி அமாவாசை தினம், பித்ருக்கள் எனப்படும் நம் முன்னோர்களை வழிபடுவதற்குரிய மிக முக்கியமான நாட்களுள் ஒன்றாகும். இந்த ஆண்டு ஆடி அமாவாசை ஆகஸ்ட் 12 (ஆடி 27) புதன்கிழமை அன்று வருகிறது.
ஆடி மாதத்தில் சூரியன் தனது பயணத்தை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி மாற்றும் தட்சிணாயண புண்ணிய காலம் தொடங்குகிறது. தேவர்களின் கணக்குப்படி, இது மாலை வேளையைக் குறிப்பதால், ஆடி மாதத்தை ‘தேவலோக பிரதோஷம்’ என்றும் அழைப்பார்கள்.
சாஸ்திரங்களின்படி, அமாவாசை நாட்களில் பித்ரு லோகத்தில் இருக்கும் நம் முன்னோர்கள் பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினரைப் பார்க்கத் தொடங்குகிறார்கள். தமிழ் ஆண்டில் முதலில் வரும் ஆடி அமாவாசையில் தொடங்கும் முன்னோர்களின் பூலோகப் பயணம், புரட்டாசி மஹாளய அமாவாசையில் உச்சமடைந்து, தை அமாவாசையில் நிறைவடைகிறது. எனவே, இந்த புண்ணிய நாளில் முன்னோர்களை நினைத்து வழிபடுவது குடும்பத்திற்கு அளவில்லாத நன்மைகளைத் தரும்.
குடும்பத்தில் தொடர்ந்து ஏற்படும் சுபகாரியத் தடைகள், வியாபாரத்தில் முன்னேற்றமின்மை, அமைதியின்மை மற்றும் ஆரோக்கியக் குறைபாடுகளுக்கு பித்ரு தோஷமும் ஒரு முக்கியக் காரணமாகும். ஆடி அமாவாசை நாளில் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதன் மூலம், முன்னோர்களின் மனக்குறைகள் நீங்கி, பித்ரு தோஷ நிவர்த்தி ஏற்படும்.
தர்ப்பணம் செய்யும் முறை
ஆடி அமாவாசை நாளில் நீர்நிலைகள், நதிக்கரைகள் அல்லது கடற்கரைகளில் தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமானது. வசதி இல்லாதவர்கள் வீடுகளிலேயே முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்யலாம்.
தர்ப்பை புல்லைப் பயன்படுத்தி, பவித்ரம் அணிந்து, கையில் எள்ளும் நீரும் ஏந்தி முன்னோர்களின் பெயர்களைச் சொல்லி தர்ப்பணம் செய்ய வேண்டும். தந்தை வழி மற்றும் தாய் வழி முன்னோர்களின் பெயர்களைக் கூறி, ‘என் முன்னோர்கள் இந்த எள் நீரால் திருப்தியடைந்து என்னை ஆசீர்வதிக்கட்டும்’ என மனதாரப் பிரார்த்திக்க வேண்டும்.
ஆடி அமாவாசை நாளில் காலை 8:30 மணிக்கு மேல் மதிய வேளைக்குள் தர்ப்பணம் செய்து முடிப்பது நல்லது. முன்னோர்களுக்கான படையலை நண்பகல் 11:30 மணிக்கு மேல் போடலாம்.
ஆடி அமாவாசை நாளில் செய்ய வேண்டிய தானங்கள்
முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து முடித்த பிறகு, மாலையில் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களை வழிபடுவது சிறந்தது. அன்றைய தினம் ஏழை எளியவர்களுக்கு உணவு, உடை, மற்றும் குடிநீர் தானம் வழங்குவது பன்மடங்கு புண்ணியத்தைச் சேர்க்கும். மேலும், ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவதும் சிறந்த அறச்செயலாகும்.
இந்த அபூர்வ நாளில் செய்யப்படும் வழிபாடுகளால் தீராத வியாதிகள் அகலும், சுபகாரியத் தடைகள் விலகும், பொன் பொருள் சேர்க்கை உண்டாகும், மேலும் விட்டுப்போன குலதெய்வ வழிபாட்டை மீண்டும் தொடங்குவதற்கு இது மிகச் சிறந்த நாளாகும்.
