மருத்துவ குணம் நிறைந்த துளசி செடி மிகவும் புனிதமான தாவரமாக பார்க்கப்படுகிறது. தினசரி வழிபாட்டின் ஒரு பகுதியாக துளசிக்கு பூஜை செய்யும் பழக்கம் உள்ளது. அதேபோல், துளசி செடி இருக்கும் வீட்டில் நேர்மறை ஆற்றல் நிலவும் என்றும், லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும் என்றும் பலர் நம்புகின்றனர்.
பலர் வீட்டின் அழகுக்காகவும், ஆன்மிக நம்பிக்கையின் காரணமாகவும் ஒன்றுக்கு மேற்பட்ட துளசி செடிகளை வளர்க்கின்றனர். ஆனால், இதுகுறித்து வாஸ்து சாஸ்திரம் என்ன கூறுகிறது என்பது குறித்து பார்ப்போம்.
ஒன்றுக்கு மேற்பட்ட துளசி செடிகளை வளர்க்கலாமா?
வாஸ்து நம்பிக்கையின்படி, வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட துளசி செடிகளை வளர்ப்பதில் எந்தத் தடையும் இல்லை. இருப்பினும், அவற்றை வளர்க்கும்போது சில வழிமுறைகளைப் பின்பற்றுவது நல்லது என்று கூறப்படுகிறது.
சரியான இடத்தில், சரியான முறையில் பராமரிக்கப்படும் துளசி செடிகள் வீட்டில் நல்ல சூழலை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது.
வாஸ்து சாஸ்திரத்தில், துளசி செடிகளை 1, 3, 5 அல்லது 7 போன்ற ஒற்றைப்படை எண்ணிக்கையில் வளர்ப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இரட்டைப்படை எண்ணிக்கையில் வளர்ப்பதை சில வாஸ்து நிபுணர்கள் தவிர்க்குமாறு பரிந்துரைக்கின்றனர்.
இதையும் படிங்க : நல்ல விஷயங்களை செய்வதற்கு முன் ஏன் தேங்காய் உடைக்கிறோம்?
எந்த திசையில் வைப்பது சிறந்தது?
வாஸ்து நம்பிக்கையின்படி, வடக்கு, கிழக்கு, வடகிழக்கு திசைகளில் துளசி செடிகளை வைப்பது நல்லது. இந்த திசைகள் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் என்றும், குடும்பத்தில் அமைதி மற்றும் வளம் நிலைக்கும் என்றும் நம்பப்படுகிறது. தெற்கு திசையில் துளசி செடியை வைப்பதைத் தவிர்க்க வேண்டும்
துளசி வளர்ப்பதில் கவனிக்க வேண்டியவை
தினமும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றுங்கள். போதுமான சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் வையுங்கள்.
காய்ந்த இலைகள் மற்றும் கிளைகளை அவ்வப்போது அகற்றுங்கள். நல்ல வடிகால் வசதி கொண்ட மண்வகையை பயன்படுத்துங்கள். இவ்வாறு பராமரித்தால், துளசி செடி நீண்ட காலம் ஆரோக்கியமாக வளர வாய்ப்புள்ளது.
துளசியின் பயன்கள்
துளசி ஒரு புனிதச் செடியாக மட்டுமல்லாமல், பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகையாகவும் கருதப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் துளசி, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது முதல் மனஅழுத்தத்தைக் குறைப்பது வரை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
