செல்போனுக்கு வந்த QR கோட்… ஒரே ஸ்கேன்: ரூ.1.21 லட்சத்தை இழந்த சென்னை வியாபாரி!

சென்னையில் ஊறுகாய் வியாபாரி ஒருவரிடம் அரசு உதவித்தொகை தருவதாகக் கூறி, கியூ.ஆர். கோட் மூலம் லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்காமாட்சி. இவர் அப்பகுதியில் ஊறுகாய் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.

இந்நிலையில், முத்துக்காமாட்சியின் தொலைபேசி எண்ணிற்கு மர்ம நபர் ஒருவர் அழைத்துள்ளார். அதில் பேசிய நபர், உங்கள் மகன் கல்லூரியில் படித்து வருவதால், அவருக்கு அரசின் சிறப்பு உதவித்தொகையாக ரூ.48,000 வழங்கப்படுவதாக கூறியுள்ளார். இந்த தகவலைக் கேட்டு முத்துக்காமாட்சியும் அதை உண்மை என நம்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அந்த மர்ம நபர், “இந்த 48 ஆயிரம் ரூபாய் பணத்தை உடனடியாக உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்றால், உங்களது வாட்ஸ்அப் எண்ணிற்கு ஒரு கியூ.ஆர். கோட் (QR Code) அனுப்புகிறேன். அதை உங்கள் கூகுள் பே அல்லது போன் பே செயலியில் ஸ்கேன் செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து, தனது செல்போனுக்கு வந்த கியூ.ஆர். கோடை உடனடியாக ஸ்கேன் செய்துள்ளார். ஆனால், ஸ்கேன் செய்த சில வினாடிகளிலேயே அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.21 லட்சம் பணம் எடுக்கப்பட்டதாக SMS வந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக அந்த தொலைபேசி எண்ணை மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றபோது, அது ‘ஸ்விட்ச் ஆஃப்’ செய்யப்பட்டு இருந்தது.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முத்துக்காமாட்சி, உடனடியாக இதுகுறித்து சென்னை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

Latest News