வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் அருகே உள்ள பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார் குட்டை மலை கிராமத்தில், சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனச்சரகர் பாபு தலைமையிலான வனத்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
கிராமத்தில் உள்ள வீடுகளில் நடத்தப்பட்ட தீவிர சோதனையின் போது, ஒரு வீட்டில் இரண்டு நாட்டு துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அந்த ஆயுதங்கள் அதே பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் (53) என்பவருக்கு சொந்தமானவை என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, இரண்டு நாட்டு துப்பாக்கிகளையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த வீட்டில் சட்டவிரோதமாக வைத்திருந்த மான் இறைச்சியும் கைப்பற்றப்பட்டது. பின்னர் அவரை வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் மத்திய சிறையில் அடைத்தனர்.
