வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியில் இன்று காலை மின்சாரத் துறை சார்பில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.
தொழில்நுட்பக் கோளாறால் வெடித்த தீ
மின்தடை காரணமாக, காட்பாடி ஓட்டை பிள்ளையார் கோயில் அருகில் அமைந்துள்ள ‘ட்ரெண்ட்ஸ்’ (Trends) துணிக்கடையில் ஜெனரேட்டர் இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஷோரூமின் தரைதளத்தில் இயங்கிக் கொண்டிருந்த ஜெனரேட்டரில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஜெனரேட்டரிலிருந்து கரும்புகை வெளியேறி, கணநேரத்தில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. சிறிது நேரத்திலேயே ஜெனரேட்டர் முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தது.
50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தப்பியோட்டம்
தரைதளத்தில் தீப்பிடித்து புகை பரவியதை உடனடியாக உணர்ந்த ஷோரூம் ஊழியர்கள் (50-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள்) மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு பாதுகாப்பாக வெளியேறினர். நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
போக்குவரத்து பாதிப்பு
துணிக்கடையிலிருந்து கரும்புகை வெளியேறுவதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டதால், சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருதம்பட்டு காவல் துறையினர், கூட்டத்தைக் கட்டுப்படுத்தி போக்குவரத்தைச் சீர்செய்தனர்.
தொடர்ந்து, காட்பாடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீவிரமாகப் போராடி தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீயணைப்புத் துறையினரின் துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
