பீகார் மாநிலத்தின் சமஸ்திபூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளிக்குச் செல்லும் வழியில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகார் மாநிலம், சமஸ்திபூர் மாவட்டத்தின் கைஜியா கிராமத்தைச் சேர்ந்தவர் சோனம் குமாரி. இவர் 12-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று (திங்கட்கிழமை) காலை வழக்கம்போல் பள்ளிக்குச் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அந்த மாணவியை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், அந்த மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கொலை நடந்த இடத்தில இருந்த நான்கு தோட்டாக்களை கைப்பற்றி தடயவியல் ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர். விசாரணையில், மாணவியின் தாயார் சங்கீதா தேவி கூறுகையில், சம்பவத்திற்கு முந்தைய நாள் அந்த இளைஞர் தனது மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாக தெரிவித்தார். மேலும், தனது மகளுடன் தொடர்பில் இருந்த அதே நபர்தான் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர். மாணவி கொல்லப்பட்ட தகவல் பரவியதும், அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
