தமிழகத்தில் சமீப காலமாக வழக்கத்தை விட அதிக மின் கட்டணம் விதிக்கப்பட்டதாக பல்வேறு பகுதிகளில் புகார்கள் எழுந்து வருகின்றன. கடந்த முறை செலுத்திய தொகையை விட இரண்டு முதல் மூன்று மடங்கு வரை மின் கட்டணம் உயர்ந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.
மின்வாரியத்தின் விளக்கம் என்ன?
தமிழ்நாடு மின்சாரத் துறையின் நெல்லை மண்டல தலைமைப் பொறியாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சில மின் பிரிவுகளில் பில்லிங் செயல்முறையில் ஏற்பட்ட அசாதாரண நிலைகள் காரணமாக பொதுமக்களுக்கு கூடுதல் கட்டணம் பதிவாகியிருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மீட்டர் கணக்கீட்டில் ஏற்பட்ட பிழைகள் மற்றும் பில்லிங் நடைமுறைகளில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக சில நுகர்வோருக்கு தவறான மின் கட்டணம் கணக்கிடப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க அனைத்து மேற்பார்வை பொறியாளர்களும் தங்களது கட்டுப்பாட்டிலுள்ள பிரிவுகளில் காலமுறைப்படி திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், பழுதடைந்த அல்லது சரியாக செயல்படாத மின்மீட்டர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க பிரிவு அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
